குறைந்த செலவில் வீடு கட்டுவது என்றவுடன் இரண்டாம் தரப் பொருட்களைப் பயன்படுத்தித் தரம் குறைவாகக் கட்டுவது என்று எண்ணி விடாதீர்கள். நமது சுற்றுப்புறத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உயர்ந்த தரத்துடன் குறைவான கட்டுமானச் செலவில் வீடுகளை எளிதாகக் கட்டலாம்.
கட்டுமானச் செலவைப் பொதுவாக இரண்டாகக் கூறலாம்.
1) மூலப்பொருட்களுக்கு ஆகும் செலவு
2) வேலையாட்களுக்கு ஆகும் செலவு
செலவைக் குறைக்கும் பொது வழிகள்:
சுற்றுப்புறத்தில் கிடைக்கும் கட்டுமானப்பொருட்களைக் கொண்டு மூலப்பொருட்களுக்கு ஆகும் செலவையும் முறையான திட்டமிடல் மூலமாக வேலையாட்களுக்கு ஆகும் செலவையும் கணிசமான அளவு குறைக்க முடியும்.
- 23 செ.மீ. அகலத்தில் சுவரைக் கட்டுவதற்கு மாற்றாகப் பதினைந்து செ.மீ. சுவரைக் கட்டலாம். இதன் மூலம் தரைப்பரப்பு(‘Floor Area’)ம் அதிகமாகும்.
- செங்கலுக்கு மாற்றாக நமது சுற்றுவட்டாரத்தில் கிடைக்கும் உள்ளீடற்ற பைஞ்சுதைக் கட்டிகளை(‘Cement Blocks’)ப் பயன்படுத்தலாம்.
- மரச்சாளரங்களுக்கு மாற்றாகச் சுற்றுச்சூழலுக்கு உகந்த வலுவூட்டிய திண்காரைச் (RCC) சட்டங்களைப் பயன்படுத்தலாம்.
- வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் முன்னதாகத் திட்டமிட்டு அமைப்பதன் மூலம் செலவைக் குறைக்கலாம்.
- வீட்டின் அழகைக் காட்டிலும் இன்றியமையாத பகுதிகளுக்கு முதன்மை கொடுக்க வேண்டும். அழகைக் கூட்ட நினைத்தால் செலவையும் கூட்ட நினைக்க வேண்டிவரும்.
அடித்தளம்:
அடித்தளத் தூண்களுக்காக மூன்று முதல் நான்கு அடி வரையிலும் ஆறு விரலம்('Inch') தடிமனிலும் சுதை அமைப்பதற்கு மொத்தச் செலவில் பத்து முதல் பதினைந்து விழுக்காடு ஆகும். சரளை மண், செம்மண் ஆகியவற்றைப் பயன்படுத்தி இரண்டு அடி ஆழத்தில் கருங்கல் அடித்தளம் அமைப்பதன் மூலம் இச்செலவைக் குறைக்க முடியும்.
வளைவு அடித்தளத்திற்கு (‘Arch Foundation’) சாதாரண மண்ணைப் பயன்படுத்துவதன் மூலம் நாற்பது விழுக்காட்டளவிலும் கீழ் அகன்ற நிலைத்தூண்களுக்குக் கரிசல் மண்ணைப் பயன்படுத்துவதன் மூலம் இருபது முதல் இருபத்தைந்து விழுக்காட்டளவிலும் செலவைக் குறைக்கலாம்.
அடிப்பீடம் (‘Plinth’):
மண்ணில் இருந்து ஓரடி வரையிலும் 1:6 என்னும் அளவில் கலவையைப் பயன்படுத்தலாம்; அடிப்பீடத் தளத்தை (‘Plinth Slab’) நான்கு முதல் ஆறு விரலம் வரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்; இவ்வாறு செய்வதன் மூலம் முப்பது முதல் ஐம்பது விழுக்காட்டளவு சேமிக்க முடியும். மேலும் சுவரைச் சுற்றி சுதைத்தளத்தை அமைப்பதன் மூலம் மண்ணரிப்பையும் தடுக்க முடியும்.
சுவர் எழுப்புதல்:
ஆறு முதல் ஒன்பது விரல அளவில் வெளிச்சுவரையும் நான்கு விரல அளவில் உள்சுவரையும் அமைக்கலாம். செங்கலைப் பயன்படுத்துவதற்கு முன் இருபத்து நான்கு மணிநேரம் ஊற வைத்துவிடுங்கள்.
எலிப்பசைச் சுவர் (‘Rat Trap Bond wall’):
இது ஒரு குகைச் சுவர் ஆகும்; இது அதிக வெப்பத்தையும் செங்கல் பயன்பாட்டையும் குறைக்கும். எலிப்பசைச் சுவரை சாதாரண பிளண்டேசு சுவர் பிணைப்புடன் (‘Flemish Bond’) ஒப்பிட, இருபத்தைந்து விழுக்காட்டளவில் செலவைக் குறைக்க முடியும். மேலும் எலிப்பசைச் சுவர், கண்கவர் தோற்றத்தையும் கொடுக்கும்.
சுதைச் சுவர்:
செங்கலை உருவாக்கத் தேவைப்படும் எரிபொருளில் மூன்றில் ஒரு பங்கே சுதைச் சுவருக்கு (‘Concrete Block’)த் தேவைப்படும்; இத்துடன் வெளிப்பூச்சும் தேவைப்படாது. இவ்வாறு பதினைந்து முதல் இருபது விழுக்காட்டளவில் செலவைக் குறைக்க முடியும்.
கதவும் சாளரங்களும்:
மரச்சாளரங்களுக்கு மாற்றாகச் சுதை(‘Concrete’), இரும்பு ஆகியவற்றில் சட்டங்களை அமைப்பதன் மூலம் முப்பது முதல் நாற்பது விழுக்காட்டளவுச் செலவு குறையும்.
விட்டக்கல் (‘Lintels’):
வலுவூட்டப்பட்ட சுதை விட்டக்கல்லை (‘RCC Lintels’)த் தவிர்த்து செங்கல் வளைவுகளை அமைப்பதன் மூலம் முப்பது முதல் நாற்பது விழுக்காட்டுச் செலவைக் குறைத்து விடலாம். விட்டக்கல் அழகான தோற்றத்தையும் அளிக்கும் என்பது கூடுதல் நன்மையாகும்.
கூரை வேய்தல்(‘Roofing’):
12.5 செ.மீ அளவில் வலுவூட்டப்பட்ட சுதைச் சுவருக்கு மாற்றாக நிரப்பி(‘Filler’)க் கூரையும் முன் வார்ப்பு (‘Precast’)ப் பொருட்களையும் பயன்படுத்துவதன் மூலம் இருபத்தைந்து விழுக்காடு வரை செலவைக் குறைக்க முடியும்.
நிரப்பிக் கூரை (‘Filler Slab’):
செங்கல், ஓடு, சுதைக் கட்டி ஆகியவற்றைக் கூரையின் கீழ்ப்பாகத்தில் பயன்படுத்தலாம். இவ்வாறு கூரைக்குத் தேவைப்படும் சுதை அளவைக் குறைக்கலாம். இதனால் கூரைக்கு அழகிய தோற்றம் கிடைப்பதுடன் கூரையின் கீழ்ப்பாகத்தில் இவற்றைப் பயன்படுத்துவதனால் சுதை வலிமையும் பாதிக்கப்படாது.
குறிப்பு: இதுவரை நாம் பார்த்தவற்றை உங்கள் பொறியாளர், வடிவமைப்பாளர் ஆகியோருடன் கலந்து பேசிப் பயன்படுத்துங்கள்.
No comments:
Post a Comment