Tuesday, March 12, 2019

பாசிட்டிவ் வார்த்தைகளில் வெற்றி

ஒரு எதிர்மறையான கருத்தை வலிமை இழக்கச் செய்ய ஏழு நேர்மறையான வாசகங்கள் தேவை எனும் ஒரு சக்தி வாய்ந்த ஒரு வாசகத்தை ரெனி ஹார்ன்பக்கிள் என்பவர் சொன்னார். ஒருகணம் அதைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.
அது உண்மையாக இருக்க முடியுமா? அத்தனை எளிமையாக இருக்க முடியுமா? ஒவ்வொரு எதிர்மறையான வாசகத்தையும் ஏழு நேர்மறையான வாசகங்களால் ரத்துசெய்துவிட்டு ஒருவனோ ஒருத்தியோ தங்களது விதியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட முடியுமா? இது சோதித்துப் பார்க்கக் கூடியதா?
காத்திருப்பு
நிச்சயமாக. இதைச் சோதனை செய்ய முடியும். நான்தான் இதை நம்புவதற்கு மிகவும் கஷ்டப்பட்ட முதல் நபர். இது பொய்யாக இருக்குமோ என்று ஆராயப் புகுந்து இந்தக் கோட்பாட்டை முழுமையாக நம்பும் முதல் நபராக மாறியதும் நான்தான்.
நான் ஒரு யதார்த்தவாதி. எனவே இந்தக் கூற்றில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்று நான் ஆராய்ந்தேன். யாராவது என்னிடம் எதிர்மறையான ஒன்றைக் கூற மாட்டார்களா என்று காத்திருக்கத் தொடங்கினேன்.
எந்த எதிர்மறையான செய்தி வந்தாலும் அதை 7 நேர்மறையான செய்திகளால் ரத்துசெய்துவிட வேண்டும் என்று எனது இதயத்தைத் தயார்செய்து வைத்திருந்தேன். நான் யுத்தத்துக்குத் தயாராக இருந்தேன். நான் பசியுடன் இருந்தேன். என்னால் செய்ய முடியாத ஒன்றை ஒருவர் என்னிடம் கூற வேண்டும் என்று விரும்பினேன். நான் அந்த வேலைக்கு லாயக்கில்லை என்று கூறப்படவும், நான் அத்துணை நல்லவன் இல்லை என்று கூறப்படவும் காத்திருந்தேன்.
வந்தது எதிர்மறை வாசகம்
உங்கள் கனவுகளைக் கொன்று உங்களைப் புறமுதுகிட வைக்க எப்போதும் யாராவது விருப்பத்துடன் இருக்கிறார்கள். ஒரு எதிர்மறை வாசகத்துக்காக நான் அதிகம் காத்திருக்க நேரவில்லை.
நான் கட்ட விரும்பிய வீட்டைக் கண்டறிந்தேன். அதீத மகிழ்ச்சியில் நான் இருந்தேன். அப்போது என் வயது 21தான். அதற்கு முன்பு எனக்கு வீடு கிடையாது. நான்கு படுக்கையறை, இரண்டு கார் காரேஜ்கள் மற்றும் இரண்டு குளியலறைகள் கொண்டதாக எனது வீடு இருக்க வேண்டுமென்று விரும்பினேன்.
என் வீடு பற்றிய திட்டத்தை நான் மிகவும் அன்பு செலுத்தும் ஒரு தம்பதியிடம் காண்பித்தேன். அவர்கள் எனது திட்டம் குறித்து மிகுந்த சந்தோஷம் அடையப்போகிறார்கள் என்று நினைத்தேன். நெஞ்சு நிறைந்த பெருமையுடன் அவர்களிடம் திட்டத்தைக் காட்டி, நான் கட்டப்போகும் வீட்டுக்கான வரைபடம் இதுதான் என்று கூறினேன். அவர்கள் வரைபடத்தைப் பார்த்தார்கள். என்னைப் பார்த்து ஏமாற்றத்துடன் உதட்டைச் சுழித்து, “உன்னைப் பொறுத்தவரை இது பெரிய திட்டம். இதை நடைமுறைப்படுத்த முடியாது. உன்னிடம் கடன் தொகையும் இல்லை. ஒரு சின்ன வீடாக உன் திட்டத்தை ஆரம்பிக்கலாம்” என்றார்கள்.
ஏழு வாசகங்கள்
இதைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன். இதுதான் எனக்கு அப்போதைய தேவையாக இருந்தது. யுத்தப் பேரிகைகள் ஒலித்தன. போருக்கான சங்குகள் முழங்கின. போர் தொடங்கியது.
நான் என் காரில் ஏறினேன். எனது கண்ணில் கனலுடன், “இது என் வீடு. இந்த வீட்டைப் பெறுவேன். எதுவும் என்னைத் தடுக்க முடியாது. இந்த நிலம் என்னுடையது. நான் அதைக் கட்டுவேன். எனக்கு அது கிடைக்கும்! என்ற உணர்வோடு நான் தேர்ந்தெடுத்த நிலத்துக்கு வண்டியை ஒட்டினேன்.
அந்த நிலத்தைச் சுற்றிவந்து ஏழு முறை சொன்னேன். “இந்த இடத்தில்தான் நான் என் வீட்டைக் கட்டுவேன்! எனக்கு அது கிடைக்கும்!” ஒவ்வொரு முறை சொல்லும்போதும் அந்த வீட்டைப் பெறுவதிலிருந்து எதுவும் என்னைத் தடுக்காது என்று நான் நம்பத் தொடங்கினேன்.
நான் வெல்ல முடியாதவனாகவும், இன்னல்களுக்குத் தயாரானவனாகவும் ஆனேன். நான் இந்த நிலத்தில் வாழ்வதைப் பார்த்தேன். நான் கேட்ட எதிர்மறைக் கருத்துகளை உண்மையிலேயே மறந்தே போய்விட்டேன். நான் இந்த வீட்டைக் கட்டுவதைத் தடுக்க எந்த வழியும் சாத்தியமில்லை என்று நம்பத் தொடங்கினேன்.
பலித்தது
எனது வீட்டைக் கட்டக் குறைந்த வட்டியில் பணம் வழங்கப்பட்டது. பல ஆயிரம் டாலர்கள் ஊக்கத்தொகையும் கிடைத்தது. அது நடந்து பல மாதங்களுக்குப் பிறகும் என்னிடம் எதிர்மறையாகக் கருத்து தெரிவித்தவரை நான் மறந்தே போயிருந்தேன். நேர்மறையான கருத்து மற்றும் செயல்களால் அதை முழுமையாக என் மனதிலிருந்து அகற்றியிருந்தேன். அது வேலையும் செய்தது!
என்னால் அத்தனை பெரிய வீட்டை அடைய முடியாது என்று கூறியவர்கள் என்னைப் புண்படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. அவர்கள் தங்கள் அனுபவங்களிலிருந்து அதைச் சொன்னார்கள். அவர்களைப் பொறுத்தவரை அவர்கள் எனக்கு உதவி செய்கிறார்கள். அதை ஏற்பது எனக்கு எளிதாகவே இருந்திருக்கும்.
அவர்களது கருத்து தவறு என்று சொல்வதற்கு நான் யார்? நான் அதற்கு முன்பு ஒரு வீட்டை வாங்கியதில்லை; அவர்கள் வாங்கியிருக்கிறார்கள். அப்போதைய நிலையைத் திரும்பிப் பார்க்கும் போது அவர்களது ஞானத்துக்கு நான் பணிந்து போவதே புத்திசாலித்தனமாகத் தெரிந்திருக்கும். ஏனெனில் முன்பே நான் சொன்னதுபோல, அவர்கள் தங்களது அனுபவத்திலிருந்து பேசினார்கள்.
ஏழு நேர்மறை வாசகங்கள்
இருந்தாலும் நான் என் இதயத்தை எதிர்மறையான ஒரு கருத்துக்குத் தயாராக வைத்திருந்தேன். எப்படியான கூற்றுக்கும் நேர்மாறாகச் செயல்படுவது என்றும் ஏழு நேர்மறை வாசகங்களால் அதை ரத்து செய்யவும் மனரீதியாக என்னைத் தயார்படுத்தியிருந்தேன். சூழ்நிலை இத்தனை எதிர்மறையாக இருக்கும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அப்படி இருந்ததில் எனக்கு மகிழ்ச்சிதான்.
ஏழு என்ற எண் முழுமையின் எண்ணாகும். உங்களால் முடியாது என்று ஒருவர் ஒருமுறை கூறினால் என்னால் முடியும் என்று ஏழு முறை கூறுவது பற்றி எண்ணிப்பாருங்கள். எவ்வளவு அழகான கருத்து இது! உங்களை யாராலும் தடுக்கவே முடியாது!
யாராவது ஒருவர் இதைப் படித்துவிட்டு, இது வெறும் கட்டுக்கதை, கிறுக்குத்தனமானது, வேலைக்கு ஆகாது, இதெல்லாம் உண்மையல்ல என்று சொல்வார்கள். ஆனால் நான் சொல்கிறேன், இது உண்மை! இது உண்மை! இது உண்மை! இது உண்மை! இது உண்மை! இது உண்மை! இது உண்மை!
(அமெரிக்க தன்னம்பிக்கைப் பேச்சாளர் ஜானி டி. விம்ப்ரே எழுதி சக்சஸ் ஞான், சென்னை வெளியிட்டுள்ள from the HOOO to doing GOOD எனும் நூலிலிருந்து ) 

No comments:

Post a Comment